கிரேக்கத்திலிருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட 22 பழங்காலத் தொல்பொருட்களை இஸ்ரேல் மீள ஒப்படைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இவ்வாறான தொல்பொருட்கள் மீள ஒப்படைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை, ஏதென்ஸில் அமைந்துள்ள தேசிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரேலினால் மீள ஒப்படைக்கப்பட்ட தொல்பொருட்கள் கிரேக்க கலாசார அமைச்சர் லினா மெண்டோனியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, மீள ஒப்படைக்கப்பட்ட தொல்பொருட்களில் 15 அத்தீனிய மட்பாண்டங்கள், ஆறு கொரிந்திய மட்பாண்டங்கள் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட பெண் உருவச் சிலையொன்றும் அடங்குகின்றன. இவை கி.மு. 700ஆம் ஆண்டு முதல் கி.மு. 320ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தொல்பொருள் அதிகார சபையினரால் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், இந்தத் தொல்பொருட்கள் இஸ்ரேலில் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன அல்லது அவை கிரேக்கத்திலிருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட சூழ்நிலைகள் என்ன என்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகளும் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
கையளிப்பு நிகழ்வில் உரையாற்றிய கிரேக்க கலாசார அமைச்சர் லினா மெண்டோனி, இந்த மீள ஒப்படைப்பு, கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கிரேக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.
“கலாசாரப் பொருளொன்று அதன் பூர்வீக இடத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் பரந்த குறியீட்டு மற்றும் அறநெறி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
கிரேக்கத்துக்கான இஸ்ரேலியத் தூதுவர் பினினாட் யானாயும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
கிரேக்கமும் இஸ்ரேலும் இராஜதந்திரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தமது உறவுகளை விரிவுபடுத்தி வரும் நிலையில் இந்த முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், கிரேக்கத்தில் ‘அக்கிலீஸ் ஷீல்ட்’ (Achilles Shield) என அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதற்காக, இரு நாடுகளும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை ஏற்றுமதி ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.









