இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய பயணி ஒருவர் கொண்டு சென்ற யானைச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி காந்தங்களை, உயிரியல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கவில்லை.
விலங்குகளின் கழிவுப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சிகளின் இளம்புழுக்கள் மற்றும் களைகளின் விதைகள் காணப்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவை கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், ஆக்கிரமிப்புத் தாவரங்கள் நாட்டுக்குள் பரவுவதற்கும் வழிவகுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நினைவுப் பரிசுகளாக விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், இத்தகைய பொருட்களை உயிரியல் பாதுகாப்புக் காரணங்களால் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவர அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த பயணி விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் அந்தக் காந்தங்களைத் தாமாக முன்வந்து அகற்றியுள்ளார்.
வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்படும் நினைவுப் பரிசுகள் அனைத்தையும் அவுஸ்திரேலியாவுக்குள் கொண்டுவர அனுமதி கிடையாது என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு இறக்குமதி விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு சர்வதேசப் பயணிகளிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.









