சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான அராம்கோவின் நிர்வாகக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கட்டடம் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அவர்களை எதிர்த்துப் போராடும் சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. எண்ணெய் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணம் மற்றும் தலைநகர் ரியாத் நோக்கி ஏவுகணைகள் வருவதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இடைமறிக்கப்பட்ட ஹூதி ஏவுகணைகளின் சிதைவுகள் ரியாத்திலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் நான்கு பேர் காயமடைந்ததுடன், 15 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சவூதி அரேபிய சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் ஹூதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யேமன் தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் செவ்வாய்க்கிழமை புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அல் மசீரா தொலைக்காட்சி மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு முன்னதாக, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு கூட்டணிப் படைகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
மேலதிகத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் காரணமாக, காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஆலோசனையைத் தொடர்ந்து சில விமான நிறுவனங்கள் தமது விமானங்களை ரியாத்திலிருந்து நாட்டின் ஏனைய விமான நிலையங்களுக்கு மாற்றியுள்ளன. பயணிகளுக்கான சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விமானப் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான ஒஸ்ப்ரே ஃப்ளைட் சொல்யூஷன்ஸின் தலைமைப் புலனாய்வு அதிகாரி மெத்தியூ போரீ தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியத்தின் தரவுகளின்படி, ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் சவூதி அரேபிய விமான நிலையங்களிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த 3,120 இற்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது சேவையில் இல்லை எனப் பதிவாகியுள்ளன.
இது திட்டமிடப்பட்ட மொத்தப் புறப்பாடுகளில் சுமார் 41 சதவீதமாகும். இதில் புதன்கிழமை புறப்படவிருந்த 300 இற்கும் மேற்பட்ட விமானங்களும் அடங்குகின்றன. ஹூதி தாக்குதல்கள் காரணமாகப் பல விமான நிறுவனங்கள் சவூதி அரேபியாவுக்கான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன.









