பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தலைமையிலான கைபர் பக்துன்க்வா மாகாண அரசாங்கத்தை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இடைநிறுத்தியுள்ளார். இதனையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மாகாணத்தில் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அமைச்சரவை முன்வைத்த பரிந்துரையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பேணவும் மாகாண நிர்வாகம் தவறியுள்ளதாக மத்திய அமைச்சரவை குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் 232 மற்றும் 234ஆம் உறுப்புரைகளின் கீழ் அவசரகால நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம், தற்போது மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மத்திய அரசாங்கத்துக்கும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மேலும், இஸ்லாமாபாத் நோக்கி பாரிய பேரணியொன்றை முன்னெடுக்கவும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டே அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாகாண நிர்வாகம் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும், இந்தத் தீர்மானத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், மாகாண மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை மீறும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் பேச்சாளர் சுல்பிகர் புகாரி, இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் மேலும் அரசியல் ஸ்திரமின்மையையும் வன்முறையையும் ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், பாகிஸ்தானின் எதிர்க்கட்சி அரசியலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்து வருகின்றார்.
கைபர் பக்துன்க்வா மாகாண அரசாங்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை, இம்ரான் கானின் கட்சிக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.










