மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை முடிந்து வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளுடன் மட்டக்களப்பு பகுதியில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியை உடனடியாக மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
மட்டக்களப்பு-வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் கற்பிக்கும், தம்பிலுவில் பகுதியை சேர்ந்தவரும் மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வருபவருமான திருமதி.பிரேமநந்தினி மிதுலோசன் (வயது 40) என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சிறு காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.