இந்தியா – பாகிஸ்தான் பொருட்களை இலங்கை வழியாக இந்தியாவுக்குக் கடத்துவதற்காக போலியான வர்த்தக ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இந்தியாவின் வருவாய் புலனாய்வு பணியகம் (DRI) நான்கு பேரைக் கைது செய்துள்ளது.
இந்திய நிதி அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, இந்த நடவடிக்கையில் 7.3 மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமான பாகிஸ்தான் கல் உப்பு கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 3.15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இந்திய மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 மார்ச் மாதம் முதல், இறக்குமதியாளர்கள் ஒன்பது பேர், 295 கொள்கலன்கள் மூலம் இந்தப் பொருட்களை முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்கள் ஊடாக இந்தியாவுக்குக் கொண்டுவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் அமுலில் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக, இலங்கையின் கொழும்புத் துறைமுகம் வழியாக இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருட்களின் உண்மையான பிறப்பிடத்தை மறைப்பதற்காக போலியான வர்த்தக ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டதுடன், சுமார் 140 மெற்றிக் தொன் கல் உப்பைக் கொண்ட ஐந்து கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் சமர்ப்பிக்கப்பட்ட சுங்கப் பிரகடனங்களில், பொருட்களின் பிறப்பிடமாக பாகிஸ்தானும், இறுதி இலக்காக இந்தியாவும் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், இந்தியாவில் இறக்குமதி நடவடிக்கைகளின்போது போலியான சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்டு, பொருட்களின் பிறப்பிடம் தவறாகக் குறிப்பிடப்பட்டதன் மூலம் இறக்குமதித் தடைகளைத் தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வலையமைப்பில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தல் நடவடிக்கையில் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








