அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி (Green Card) பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு அனுசரணை வழங்கிவந்த மைக்ரோசொப்ட், அடோப், டாடா கன்சல்டன்சி சேர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல். டெக்னோலஜிஸ், காக்னிசன்ட் மற்றும் கேப்ஜெமினி உள்ளிட்ட எட்டு முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறைச் செயலாளர் கீத் சோண்டர்லிங், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றத் திட்டங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்டத்தின் கீழ், குறித்த எட்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதையும், ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைச் செயலாக்குவதையும் அமெரிக்க தொழிலாளர் துறை இடைநிறுத்தவுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் தமது பணியிடங்களுக்குத் தகுதியான அமெரிக்கப் பணியாளர்கள் கிடைக்கவில்லை என்பதையும், வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதால் உள்நாட்டு ஊதியங்கள் மற்றும் பணிச்சூழல் பாதிக்கப்படாது என்பதையும் நிரூபித்த பின்னர், வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்ட் பெற்றுக்கொடுக்க இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.
அமெரிக்கப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துவரும் அதேவேளை, வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் சார்ந்திருப்பதாக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் பணியிடங்களைக் குறைத்துவரும் நிலையில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏன் தொடர்ந்து அனுசரணை வழங்கப்படுகிறது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்.
நிர்வாகம் வெளியிட்ட தகவல்களின்படி, இந்த எட்டு நிறுவனங்களும் 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 30 இலட்சம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதன் அடிப்படையில், 2,30,000 இற்கும் அதிகமான H-1B விசா அனுமதிகளும், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நிரந்தர தொழிலாளர் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம், கடந்த நிதியாண்டில் தமது H-1B விண்ணப்பங்களில் சுமார் 80 சதவீதமானவை ஏற்கனவே பணியாற்றிவரும் ஊழியர்களின் விசா நீடிப்பு அல்லது குடியேற்ற அந்தஸ்து மாற்றம் தொடர்பானவை எனத் தெரிவித்துள்ளது. அவை புதிதாக ஊழியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அல்ல என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
எனினும், இந்தத் தடையால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள H-1B விசாக்கள் தானாகவே இரத்துச் செய்யப்படமாட்டாது. அதேபோன்று, பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கும் முழுமையான தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும், அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய வழிமுறைகளில் ஒன்று இதனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதையும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விரிவான குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், அமெரிக்காவில் நீண்டகால வேலைவாய்ப்பையும் நிரந்தர வதிவிட அனுமதியையும் எதிர்பார்க்கும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.










