மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பகுதியில், தந்தை ஒருவர் தனது உடற் புண்ணிலிருந்த தோலை தோண்டி எடுத்து, தனது ஒரு வயது மகளுக்கு ஊட்டிய சம்பவம், நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 24 வயதுடைய இளம் தந்தையான குறித்த சந்தேக நபர், நேற்று இரவு 8 மணியளவில் தனது வீட்டில் வைத்து, தனது உடலில் சொறி மற்றும் சிரங்கு காரணமாக ஏற்பட்ட புண்ணிலிருந்த தோலை தோண்டி எடுத்து, ஒரு வயது குழந்தையான தனது மகளுக்கு அதை சாப்பிடுமாறு ஊட்டியுள்ளார்.
இதை அவதானித்த அவரது மனைவி, குழந்தைக்கு இவ்வாறு செய்தால் தான் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவதாக தெரிவித்து அலரி விதைகளை எடுத்து அதை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்கள், அவரை காப்பாற்றி சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் அவசர இலக்கமான 1929-இற்கு அழைத்து தகவல் வழங்கினார்கள்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பரிசோதகர் த.ரஜினிகாந்த் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விரைந்து, குறித்த வீட்டை முற்றுகையிட்டு, குழந்தையை சித்திரவதை செய்த தந்தையை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 2300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.