வாகனங்களை விற்பனை செய்வதற்காக பேஸ்புக் வர்த்தகக் கணக்கின் ஊடாக விளம்பரங்களைப் பிரசுரிப்பதாகக் கூறி, நபர்களிடமிருந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (CCIB) அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் நேற்று புதன்கிழமை இரவு ஹோமாகம, மாவத்தகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனங்களை விற்பனை செய்வதற்காக பேஸ்புக் வர்த்தகக் கணக்கின் ஊடாக விளம்பரங்களைப் பிரசுரித்து, விற்பனை நடவடிக்கைகளுக்கு உதவுவதாகக் கூறி சந்தேகநபர் தொலைபேசி மூலம் பலரைத் தொடர்புகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்காக ஒரு வார கால விளம்பரத்துக்கு 5,000 ரூபாவும், இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபாவும், ஒரு மாத கால விளம்பரத்துக்கு 15,000 ரூபாவும் அவர் கட்டணமாக அறவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் உறுதியளித்தபடி விளம்பரங்களைப் பிரசுரிக்காமல், குறித்த நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குற்றவியல் முறைகேடான பணக் கையாடல், நம்பிக்கை மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹோமாகம, மாவத்தகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.








