இலங்கையின் உலகப் புகழ்பெற்ற சிலோன் தேநீர் மற்றும் கொத்து ரொட்டி, பருப்பு வடை உள்ளிட்ட பிரபலமான உணவு வகைகள், இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) சர்வதேச உணவுக் கண்காட்சியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தக் கண்காட்சி, ‘விதைகளிலிருந்து உணவுகள் வரை’ (From Seeds to Foods) என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.
ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தகவலின்படி, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 80+1 ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க சிர்கோ மாசிமோ (Circo Massimo) பகுதியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுமார் 21,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.
சிலோன் தேநீருக்கு விசேட கவனம்
இலங்கையின் பங்கேற்பில் சிலோன் தேநீர் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியக் கண்காட்சிக் கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட அரங்கில், இலங்கைத் தேயிலையின் தனித்துவமான சுவைகளை அனுபவிப்பதற்கும், நாட்டின் தேயிலைப் பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்வதற்கும் பார்வையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒக்டோபர் 8ஆம் திகதி இலங்கைத் தேயிலைச் சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் ருசி அறிமுக நிகழ்வும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பார்வையாளர்களைக் கவர்ந்த கொத்து ரொட்டி, பருப்பு வடை
இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியில் முக்கியத்துவம் பெற்றன. ரோம் நகரிலுள்ள ‘லா பெர்லா டெல் ஆசியா’ உணவகத்தின் சமையல் கலைஞர் பிரவீன் பெர்னாண்டோ, நேரடி சமையல் செயல்விளக்கங்களை வழங்கினார்.
இதன்போது பருப்பு வடை மற்றும் கொத்து ரொட்டி ஆகியவை சிலோன் தேநீருடன் பரிமாறப்பட்டன.
குறிப்பாக, ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற கொத்து ரொட்டி தயாரிப்பு செயல்விளக்கத்தைக் காணவும், அந்த உணவைச் சுவைத்துப் பார்க்கவும் பெருமளவிலான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோ, கொத்து ரொட்டி இலங்கையின் பன்முக உணவுப் பாரம்பரியத்தின் அடையாளம் எனத் தெரிவித்தார்.
“கொத்து ரொட்டி என்பது எமது தெருவோர உணவுகளின் இசைக்கச்சேரியாகும். அதன் சுவையை அனுபவிப்பதற்கு முன்பே, கத்திகளின் தாள ஓசையைக் கேட்க முடியும். எமது அனைத்துச் சமூகங்களினதும் சுவைகளை ஒரே தட்டில் அது ஒன்றிணைக்கிறது” என அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அரங்கில் இலங்கையின் கலாசாரப் பாரம்பரியம்
இதற்கிடையில், ஒக்டோபர் 9ஆம் திகதி, சஞ்சலா புலத்வத்தவின் நடனக் கலைப் பயிலகத்தைச் சேர்ந்த இலங்கை மாணவர்கள், ‘அறுவடையின் தாளம்’ (Rhythm of Harvest) என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி, சர்வதேச பார்வையாளர்களுக்கு இலங்கையின் கலாசாரப் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
‘உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான புத்தாக்கத்தை ஊக்குவித்தல்’ என்ற தொனிப்பொருளில், உலக உணவு மன்றத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
உலகின் பல்வேறு பகுதிகளின் உணவுப் பாரம்பரியங்கள், விவசாய நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் ஆறு பிராந்தியக் கண்காட்சிக் கூடங்கள் இதில் அமைக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் தயாரிப்புகள், உணவு வகைகள் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களை சர்வதேச அளவில் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கைத் தேயிலைச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இலங்கையின் பங்கேற்பு முன்னெடுக்கப்பட்டதாக ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.









