மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 54 வயதுடைய நபர் இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நிலையில் இந்த விடயத்தை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரின் தந்தை தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் வசித்துவரும் 54 வயதுடைய ஆண் ஒருவர் அதே வீதியில் உள்ள 12 வயது சிறுமியின் வீட்டுக்கு வழக்கமாக சென்று வந்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த 12 வயது சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமியும் சிறுமியின் நண்பியான பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர் தனிமையை பயன்படுத்தி குறித்த 12 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததுடன் அங்கிருந்த மற்றைய 10 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்துள்ளார்.
உடனே அந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன்பின்னர் குறித்த 10 வயது சிறுமி பாடசாலையில் வைத்து தனது நண்பியான பாதிக்கப்பட்ட மற்றைய சிறுமியை நக்கலடித்து கேலி செய்துள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் ஆசிரியருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே ஆசிரியர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை அழைத்து சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் நேற்று புதன்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகநபரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருமணம் முடித்து மனைவியை விவாகரத்து செய்துள்ளதுடன் ஒரு கையும் காலும் இயங்காத விசேட தேவையுடைய 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியின் தந்தையார் தனது மகளுக்கு நடந்த கொடூரத்தையும் அவமானத்தையும் தாங்க முடியாது சம்பவ தினமான நேற்று புதன்கிழமை இரவு நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஏற்கனவே ஒரு கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு மாதத்தில் ஒரு நாள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து இட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.