நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், நீர்மின் திட்டமொன்றின் முகாமும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சும்னுப்ரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நீர்வழியொன்று தடைப்பட்டிருக்கலாம் எனவும், இதனால் புதிகண்டகி ஆற்றில் திடீரென நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 12 வீடுகளும் இரண்டு தொங்கு பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், கோர்கா மாவட்டத்தையும் அண்டை மாவட்டமான தாதிங் மாவட்டத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலைப் பாலமொன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது. நீர்மின் திட்டமொன்றின் முகாமும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி, இந்த அனர்த்தத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதேவேளை, ஜகத் பகுதியில் மண்சரிவு அபாயத்தில் சிக்கியிருந்த ஆறு பேரை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நீர்மின் திட்ட முகாமில் பணியாற்றிய 18 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபை, கோர்கா, தனாஹுன், சித்வான், கிழக்கு நவல்பராசி மற்றும் மேற்கு நவல்பராசி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அபாயம் நிலவும் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதுடன், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மீட்புப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைந்துள்ளதுடன், ஹெலிகொப்டர் மூலம் நிலைமைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதுடன், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
புதிகண்டகி ஆறு, திரிசூலி ஆற்றுத் தொகுதியுடன் இணைகிறது. இந்த ஆற்றுத் தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் 1,457 பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









