சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யுமாறு கோரி, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டப் பேரணியில் இணைந்துள்ளனர். கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்தப் பேரணி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 4ஆம் திகதி லக்கி மர்வாட்டில் ஆரம்பமான இந்தப் பேரணி, பல மாவட்டங்களைக் கடந்து வியாழக்கிழமை வடமேற்கு நகரமான பெஷாவரைச் சென்றடைந்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் சொஹைல் அஃப்ரிடி பேரணிக்குத் தலைமை தாங்கி வருகின்றார். பெஷாவரில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தாம் குறிப்பிட்ட “உண்மையான சுதந்திரத்தை” பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் உறுதியுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
“சில அசௌகரியங்கள் இருக்கலாம். ஆனால், எங்களுக்காக இம்ரான் கான் அவர்கள் சிறையில் அனுபவிக்கும் வேதனையைவிட இந்த வலி பெரியதல்ல” என அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, பின்னர் தனது பயணப் பாதையைப் பலமுறை மாற்றியுள்ளது. பேரணி ஸ்வாபியைச் சென்றடையும் போது போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் போராட்டங்கள் அல்லது பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிக்கு மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
பேரணி பெஷாவரை அண்மித்தபோது, நகரின் சில பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இந்தச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெஷாவரில் பல தனியார் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. எனினும், பாடசாலைகளை மூடுமாறு தாங்கள் உத்தரவிடவில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் முதலமைச்சர் அஃப்ரிடிக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கும் வழிவகுத்துள்ளது. பேரணி ஆரம்பித்த இடத்துக்குச் செல்வதற்காக அவர் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஹெலிகொப்டரைப் பயன்படுத்தியதாகவும், அரச வளங்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் முன்னைய நீதிமன்ற உத்தரவை இது மீறியிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு பெஷாவர் உயர் நீதிமன்றம் முதலமைச்சரிடம் கோரியுள்ளது.
மறுபுறம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் சட்டத்தரணி கோஹர் கான், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமது கட்சி தொடர்ந்து தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் முரண்பாடுகள் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக வழிமுறைகள் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










