சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு இராச்சியம், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், வழிபாடுகளில் ஈடுபட்டும் கொண்டாடியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள காசி திரையரங்கிற்கு வெளியே ரசிகர்களுடன் இணைந்த ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, மேள தாளங்களின் இசைக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பெங்களூருவில், அதிகாலை காட்சிகளுக்கு முன்னதாக ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், வழிபாடுகளில் ஈடுபட்டும், ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு மலர் மாலைகள் அணிவித்தும் கொண்டாடியுள்ளனர்.
துபாயில் அதிகாலை 3 மணிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று சிங்கப்பூர், கனடா மற்றும் அமெரிக்காவிலும் ஏராளமான ரசிகர்கள் ஒன்றுகூடி திரைப்படத்தின் வெளியீட்டைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் மூலம், ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்று இந்தியாவிலும் ஜப்பானிலும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளமை முதன்முறையாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், ஓய்வுபெற்ற சிறை அதிகாரியான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா மற்றும் வித்யா பாலன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வரும் ரஜினிகாந்தின் உலகளாவிய ரசிகர் செல்வாக்கையும், அவரது திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பையும் இந்தக் கொண்டாட்டங்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.









