தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு, 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விரிவான தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ நேற்று வெள்ளிக்கிழமை, இந்தத் தடைகளை அறிவித்தார். இதுவரை நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இம்முறை நீதிமன்றத்தையே நேரடியாக இலக்கு வைத்துள்ளமை அமெரிக்காவுக்கும் சர்வதேச நீதிமன்றத்துக்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தத் தடைகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்கும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் கட்டுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்றத்தின் வங்கிச் சேவைகள், காப்புறுதி மற்றும் தொழில்நுட்பச் செயற்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கப் பிரஜைகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழக்குத் தொடர்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், இந்த நீதிமன்றம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளைக் கையாள்வதற்கு அதன் நட்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை நியாயமற்ற முறையில் இலக்கு வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, அமெரிக்க இராணுவத்தினர் தொடர்பான விசாரணைகள் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவுகள் தொடர்பில் அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் தடைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், அதன் 125 உறுப்பு நாடுகளும் நிறுவனத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனக் கோரியுள்ளது.
இந்தத் தடைகள் தமது விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தாது என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதி வழக்குத் தொடுநர் நஸ்ஹத் ஷமீம் கான் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணரான நவநீதம் “நவி” பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவர் 2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியதுடன், பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகவும் பதவி வகித்துள்ளார்.
போர் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன படுகொலைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதில் நவி முக்கிய பங்காற்றியுள்ளார்.
போர் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கும், அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கும் நவி பிள்ளை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி நோர்வே நோபல் குழு இந்த விருதை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் ஹேக் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தேசிய நீதித்துறை அமைப்புகள் கடுமையான சர்வதேசக் குற்றங்களை விசாரிக்க இயலாத அல்லது விருப்பமற்ற சூழ்நிலைகளில் அவற்றை விசாரித்து வழக்குத் தொடரும் நோக்கில் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.










