இந்தியாவில் ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவையை வணிக ரீதியாக ஆரம்பிப்பதற்கான இறுதி அனுமதி வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் மற்றும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையில் சமூக வலைத்தளத்தில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதி நடைமுறை குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த விவாதம் ஆரம்பமானது. இந்தியாவின் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய அவர், பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியைக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியாவுக்கு வரவேற்கிறோம், எலான். மற்றவரைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளும் வரை காத்திருங்கள்” எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “நன்றி, ராகுல். இது உண்மையிலேயே கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்துப் பரிமாற்றம், இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பெரும் வர்த்தகக் குழுமங்கள் வகிக்கும் பங்கு மற்றும் இந்தியச் சந்தையில் நுழைய முயற்சிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒழுங்குமுறைச் சவால்கள் தொடர்பான விவாதத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
எனினும், ஸ்டார்லிங்கின் இந்திய வருகையைச் சக்திவாய்ந்த வர்த்தக நலன்கள் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. செய்மதி இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் கட்டாய பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க், செய்மதிகள் ஊடாக இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்கு அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சின் தகவலின்படி, ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோவின் செய்மதி சேவைப் பிரிவு மற்றும் யூடெல்சாட் ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், வணிக ரீதியான சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேலதிக பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் அலைக்கற்றை தொடர்பான அனுமதிகளைப் பெற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களுக்கிடையில் பாரபட்சமான அணுகுமுறை பின்பற்றப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. மூன்று நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறைத் தேவைகளே பொருந்தும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.










