பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் சிறை உடை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் சிறை உடை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, மஹேன் கோபல்லவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் குழாம், மனுக்களை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
திணியாவல பாலித்த தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் குழுவொன்றினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.









