மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்புடைய தரவுகள், எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதிக்குப் பின்னர் இழக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம், தரவுகளை 90 நாட்களுக்கு மாத்திரம் பாதுகாத்து வைக்கும் காலவரையறை தொடர்பில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியிலுள்ள தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, பரஸ்பர சட்ட உதவி (Mutual Legal Assistance – MLA) நடைமுறையின் கீழ், நீதியமைச்சின் ஊடாக அப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்ற உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD), கடந்த புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த தரவுகள் 90 நாட்களுக்கு மாத்திரமே பாதுகாத்து வைக்கப்படும் என அப்பிள் நிறுவனம் விசாரணையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த 90 நாள் காலப்பகுதி நவம்பர் 29ஆம் திகதியுடன் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய கோட்டை நீதவான் பசன் அமரசேன, அதன் பின்னர் தரவுகள் இழக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.
அப்பிள் நிறுவனத்திடம் மேலதிக கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதவான், முக்கியமான சாட்சியங்களாக அமையக்கூடிய தரவுகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கோ (IGP) அல்லது சட்டமா அதிபருக்கோ (AG) ஏன் அறிவிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, அப்பிள் நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தரவுகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கும் சட்டமா அதிபருக்கும் உடனடியாக அறிவித்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கபில சந்திரசேன உயிரிழந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட நான்கு வகையான மருந்துகள் தொடர்பான அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும், ஏனைய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கபில சந்திரசேன கடந்த மே 8ஆம் திகதி உயிரிழந்த நிலையில், ஒரு மாத காலத்திற்குள் சாட்சியப் பொருட்களின் பரிசோதனைகள் நிறைவடைந்திருந்தும், சம்பந்தப்பட்ட மருந்துகள் தொடர்பான அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் இன்னமும் கிடைக்காமை குறித்து நீதவான் சுட்டிக்காட்டினார்.
இந்த முழு விசாரணைச் செயல்முறையையும் நீதிமன்றத்தினால் மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிலுவையிலுள்ள மருந்துகள் தொடர்பான அறிக்கைகளை வழங்குவதற்கு மேலும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி அறிவித்துள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.









