யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட விமானப் போக்குவரத்து அறிவித்தலில், குறித்த விமான நிலையம் ஒக்டோபர் 17ஆம் திகதி இரவு 9 மணி வரை (சர்வதேச நேரம் GMT) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பாதுகாப்பு ஆய்வுகளை நிறைவு செய்வதற்கும், மீண்டும் விமானச் சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான வசதிகள் தயாராக உள்ளதை உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக, சவூதி அரேபியாவின் பொது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவங்கள் பிராந்தியத்தின் விமானப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.
விமான நிலையத்தின் மூடல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், பல விமான நிறுவனங்கள் ரியாத் நகருக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி, பெரும்பாலான விமானங்கள் ரியாத் வான்பரப்பைத் தவிர்த்து இயங்குகின்றன. எனினும், ஜித்தா உள்ளிட்ட சவூதி அரேபியாவின் ஏனைய விமான நிலையங்கள் ஊடான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
விமானப் போக்குவரத்து பகுப்பாய்வு நிறுவனமான சிரியத்தின் தரவுகளின்படி, சவூதி அரேபிய விமான நிலையங்களில் விமானச் சேவை இரத்துச் செய்யப்பட்ட விகிதம் 46.4 சதவீதத்தை எட்டியுள்ளது.









