பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில், இன்று காலை தனியார் பாடசாலையொன்றின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 28 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேடி ரீடிங் வைத்தியசாலையின் பேச்சாளர் மொஹமட் ஆஸிம் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியதுடன், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைத்து மாணவர்களும் 13 வயது அல்லது அதற்குக் குறைந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பணியாளர்கள் தீவிர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பாடசாலையில் சுமார் 350 மாணவர்கள் பதிவு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கூரை இடிந்து வீழ்ந்தமைக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் உத்தியோகபூர்வ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதி பிரதமர் இஷாக் தார் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் இரங்கல் செய்தியொன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “எமது பிள்ளைகளே எமது பெறுமதிமிக்க சொத்தாகும். இவ்வாறான ஒவ்வொரு இழப்பும் முழு நாட்டிற்கும் ஒரு துயரமாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தச் சம்பவம் குறித்து பிரதமரும் அரசாங்கமும் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். எமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்துவது முதன்மையானதாக இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.









