இலங்கையைச் சேர்ந்த தனது 29 வயது காதலனுக்கு மீன்பிடிப் படகு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக 25,000 யூரோ பணத்தை வழங்கிய நிலையில், அவர் தன்னைத் தாக்கியதாக 40 வயதுடைய ஜேர்மன் பெண்ணொருவர் ரத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தபோது, பிட்டிவெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபருடன் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காக அவருக்கு 25,000 யூரோ பணத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்த குறித்த பெண், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபர் மேலதிக பணத்தைக் கோரி, மரக்கட்டையால் பெண்ணைத் தாக்கியதுடன், அவரது கையடக்கத் தொலைபேசியையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாம் முன்னர் வழங்கிய 25,000 யூரோ பணத்தை மீட்டுத் தருவதற்கு பொலிஸார் உதவ வேண்டும் எனவும் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ரத்கம பொலிஸார், சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










