உலகளாவிய வாகன விற்பனையில், பெட்ரோல் மூலம் மாத்திரம் இயங்கும் வாகனங்களின் பங்கு வரலாற்றில் முதன்முறையாக 50 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. கலப்பின (Hybrid) மற்றும் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) வரவேற்பு அதிகரித்து வருவதால், உலக வாகனத் தொழில்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei) செய்தித்தாள் வெளியிட்டுள்ள வாகனத் தொழில்துறை தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலகளாவிய புதிய வாகன விற்பனையில் பெட்ரோல் மூலம் மாத்திரம் இயங்கும் வாகனங்கள் சுமார் 49 சதவீதத்தைப் பெற்றுள்ளன.
இந்தப் பங்கு 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 52 சதவீதமாக இருந்தது. அதேவேளை, 2021ஆம் ஆண்டில் இது சுமார் 73 சதவீதமாகக் காணப்பட்டது.
2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில், உலகளவில் சுமார் 20.25 மில்லியன் (2.025 கோடி) பெட்ரோல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 10 சதவீத வீழ்ச்சியாகும்.
நுகர்வோர் மத்தியில் கலப்பின வாகனங்கள், மின்சாரத்தில் மின்னேற்றம் செய்யக்கூடிய கலப்பின வாகனங்கள் (Plug-in Hybrid) மற்றும் முழுமையான மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதே இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
மின்கலத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம், மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் வாகன உற்பத்தியாளர்களிடையே அதிகரித்து வரும் போட்டி ஆகியவையும் இந்த மாற்றத்துக்குப் பங்களிக்கின்றன.
எனினும், பெட்ரோல் வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளமை, உலகளாவிய வாகனச் சந்தையில் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதைக் குறிக்கவில்லை.
ஏனெனில், சந்தையின் கணிசமான பங்கை கலப்பின வாகனங்கள் கொண்டுள்ளன. இவ்வாகனங்கள் பெட்ரோல் இயந்திரத்துடன் மின்சார மோட்டாரையும் இணைத்துப் பயன்படுத்துகின்றன.
பல தசாப்தங்களாகப் புதிய வாகன விற்பனையில் பெரும்பான்மையான பங்கைக் கொண்டிருந்த பெட்ரோல் வாகனங்கள், தற்போது அந்த நிலையை இழந்துள்ளன.
இது உலக வாகனத் தொழில்துறை மின்மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.










