அமெரிக்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் குடியேற்றம் அல்லாத விசா (Nonimmigrant Visa) விண்ணப்பதாரர்கள், தமது பயணச் செலவுகள் மற்றும் எதிர்பாராத மருத்துவ அவசரநிலைகள் உள்ளிட்ட செலவுகளைச் சமாளிப்பதற்குப் போதுமான நிதி வசதிகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் நிதி ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும், விசா நேர்முகத் தேர்வின்போது அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமது பயணத்திற்கும் தங்குமிடத்திற்கும் தேவையான செலவுகளைத் தாங்களே ஏற்கக்கூடிய நிதி வசதிகளைக் கொண்டிருப்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்காவிற்குள் நுழைந்த பின்னர் அரசாங்கத்தின் நிதி உதவியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
பயணத்தின்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத இடையூறுகள், மருத்துவ அவசரநிலைகள் உள்ளிட்ட சூழ்நிலைகளால் ஏற்படும் செலவுகளையும் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க விசா விண்ணப்பச் செயல்முறையின்போது போலியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கு எதிராகவும் அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி அல்லது மோசடியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது விசா மோசடியாகக் கருதப்படும் எனவும், இதனால் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் அமெரிக்க விசாவைப் பெறுவதற்குப் நிரந்தரத் தகுதியிழப்பும் ஏற்படக்கூடும் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவுக்குப் பயணம் செய்ய விரும்புவோர், விசா விண்ணப்ப நடைமுறைகளில் எதிர்பார்க்கப்படும் நிதித் தகுதிகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான தேவைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.











