கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவொன்று, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடைந்துள்ளது.
கடும் மழையையும் பொருட்படுத்தாது கொழும்பை நோக்கித் தமது பயணத்தைத் தொடர்ந்த போராட்டக்காரர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவி உடை அகற்றப்பட்டமை தொடர்பாக பௌத்த மதத் தலைவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ சிறையிலிருந்து வெளியே செல்லும் போது, சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் தமது மத உடைகளை அணிய அனுமதிக்கும் வகையில் சிறைச்சாலை விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் மூன்று பௌத்த நிகாயாக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
எனினும், ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.










