மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக வீதி அபிவிருத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான தார் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, மாற்று நாடுகளிலிருந்து தார் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை ஆரம்பித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.ஏ. ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், இலங்கை இதற்கு முன்னர் ஈரானில் உற்பத்தி செய்யப்படும் உயர்தரத் தாரை பெருமளவில் நம்பியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளமை காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் தார் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் வீதி பராமரிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு மாதாந்தம் குறைந்தது 20,000 மெற்றிக் தொன் தார் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, கஸகஸ்தான், பஹ்ரைன், சீனா, இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மாற்று வழிகள் ஊடாகக் குறைந்த அளவில் தார் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், மாற்று நாடுகளில் தார் கிடைத்தாலும், அதனை இலங்கைக்குக் கொண்டுவருவதில் பெரும் சவால்கள் நிலவுவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் மற்றும் அமெரிக்கத் தடைகள் தொடர்பான அச்சம் காரணமாக, பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் தார் சரக்குகளைக் கையாள மறுப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, தார் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சமும் கப்பல் நிறுவனங்களிடையே நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக தார் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்குக் காப்புறுதி வழங்குவதில் சர்வதேச காப்புறுதி நிறுவனங்களும் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சிக்கல்கள், இலங்கையின் வீதி அபிவிருத்தி மற்றும் பராமரிப்புத் திட்டங்களுக்குத் தேவையான தாரைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.










