இலங்கையின் கிழக்குக் கரையிலுள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான அறுகம்பே, 2026ஆம் ஆண்டுக்கான “Condé Nast Traveller Readers’ Choice Awards” விருதுகளில் ஆசியாவின் சிறந்த கடற்கரையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தரவரிசையில் இலங்கையின் நான்கு கடற்கரைகள் ஆசியாவின் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
உலகப் புகழ்பெற்ற உலாவல் விளையாட்டுத் தலமான அறுகம்பே முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், தாய்லாந்தின் ரைலே கடற்கரை இரண்டாவது இடத்தையும், மலேசியாவின் கோரல் கடற்கரை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
இலங்கையின் ஏனைய கடற்கரைகளான பெந்தோட்டை ஒன்பதாவது இடத்தையும், தங்காலை 14ஆவது இடத்தையும், நீர்கொழும்பு 19ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆசியாவின் முதல் ஐந்து கடற்கரைகள்
- அறுகம்பே – இலங்கை
- ரைலே கடற்கரை – தாய்லாந்து
- கோரல் கடற்கரை – மலேசியா
- பொராக்கே கடற்கரை – பிலிப்பைன்ஸ்
- நூசா துவா கடற்கரை – இந்தோனேசியா
அறுகம்பேக்கு அதிக மதிப்பெண்
“Condé Nast Traveller” வாசகர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில், அறுகம்பே 98.84 புள்ளிகளைப் பெற்று ஆசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஏனைய கடற்கரைகள் பெற்ற புள்ளிகள் வருமாறு:
- பெந்தோட்டை: 88.33 புள்ளிகள்
- தங்காலை: 83.33 புள்ளிகள்
- நீர்கொழும்பு: 78.92 புள்ளிகள்
இதற்கிடையில், தாய்லாந்தின் ரைலே கடற்கரை 94.44 புள்ளிகளையும், மலேசியாவின் கோரல் கடற்கரை 93.33 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இலங்கையின் கடற்கரைச் சுற்றுலாவுக்கு சர்வதேச அங்கீகாரம்
இலங்கையின் வெவ்வேறு கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு கடற்கரைகள் இந்தத் தரவரிசையில் இடம்பெற்றுள்ளமை, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலங்கையின் கடற்கரைச் சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
2026ஆம் ஆண்டுக்கான விருதுகள் ஒக்டோபர் 6ஆம் திகதி வெளியிடப்பட்டன. இந்த வருடாந்த வாசகர்கள் கருத்துக் கணிப்பு 29ஆவது முறையாக நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் பிரித்தானியாவில் வெளியாகும் “Condé Nast Traveller” சஞ்சிகையின் வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன.










