டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ‘flydubai (FZ1073)’ விமானத்தில் இரு விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதல், இஸ்ரேலியர்களை இலக்காகக் கொண்ட தாக்குதல் முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இஸ்ரேலிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. ஒரு விமானி மற்றைய விமானியை கத்தியால் குத்தியதுடன், பயணிகளுடன் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகத் தெரிகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பயணிகளும் விமானப் பணியாளர்களும் தலையிட்டு குறித்த நபரை கட்டுப்படுத்தியதன் மூலம் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஃப்ளைடுபாய் விமானம் FZ1073, புதன்கிழமை துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, சவுதி அரேபியா–ஜோர்தான் எல்லைக்கு அருகில் அவசர சமிக்ஞையை அனுப்பியதுடன் தனது பயணப் பாதையை மாற்றியது. பின்னர், உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9.45 மணியளவில் வடமேற்கு சவுதி அரேபியாவில் உள்ள தபுக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானப் பயணக் கண்காணிப்புத் தரவுகளின்படி, முதல் அவசர சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்னர் 30 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் விமானம் சுமார் 14,000 அடி உயரத்தை திடீரென இழந்துள்ளது. விமானம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லத் தொடங்கியதைத் தொடர்ந்து பயணி ஒருவரும் விமானப் பணியாளர் ஒருவரும் விமானியின் அறைக்குள் சென்று பார்த்தபோது, துணை விமானி விமானத்தின் சில அமைப்புகளைச் சீர்குலைக்க முயன்றதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இரு விமானிகளும் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தபுக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பது தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியாக இருக்கக்கூடும் என இஸ்ரேலின் தற்போதைய மதிப்பீடு இருப்பதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், இது விமானக் கடத்தல் சம்பவம் என நம்பப்படவில்லை என நெதன்யாகு அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விமானத்தின் விமானி அறைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து ஃப்ளைடுபாய் நிறுவனம் மேலதிக தகவல்களை வெளியிடாமல், இதனை ஒரு “சம்பவம்” என மட்டும் குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து இஸ்ரேலிய பயணிகள் சவுதி அரேபியாவில் தற்காலிகமாக சிக்கிக்கொண்டனர். சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல இராணுவ விமானங்களை அனுப்புமாறு இஸ்ரேல் விடுத்த கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்ததாக ரொய்ட்டர்ஸிடம் இரு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், பயணிகள் தங்களது பயணத்தை ஃப்ளைடுபாய் நிறுவனத்தின் மற்றொரு விமானம் மூலம் தொடர்வார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டுபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த மற்றொரு ஃப்ளைடுபாய் விமானம் பின்னர் பாதுகாப்பாக இஸ்ரேலை சென்றடைந்துள்ளது.










