இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க, 2015ஆம் ஆண்டைச் சேர்ந்த பழைய கோப்புகள் உள்ளிட்ட பாரிய நிலுவை விசாரணைகளை கையாள்வதற்கு விசேட கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற பொது நிதிக்குழு (COPF) கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த கால வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்குவதால் அண்மையில் கிடைக்கப்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளின் விசாரணைகள் தாமதமடையுமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமிருந்து பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோப்புகள் தமக்கு பொறுப்பேற்க வேண்டியிருந்ததாகவும், சட்டரீதியான காலக்கெடுவை வழக்குகள் கடந்துவிடுவதைத் தடுப்பதற்காக அவற்றில் உடனடியாக தலையிட வேண்டியிருந்ததாகவும் ரங்க திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
“நான் பதவியேற்றபோது புள்ளிவிபரங்களைப் பார்த்ததில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த ஏராளமான பழைய கோப்புகள் இருப்பதை கவனித்தேன். அதனால், இந்த பழைய விடயங்களை கையாள்வதற்காக விசேட பிரிவொன்றை அமைத்து முன்னுரிமை வழங்கினோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலுவையில் உள்ள விசாரணைகளில் பெரும்பாலானவை சுமார் 2015ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களுடன் தொடர்புடையவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“2015ஆம் ஆண்டைச் சேர்ந்த கோப்புகளே பெருமளவில் உள்ளன. அந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமிருந்து கிடைத்த ஏராளமான கோப்புகள் தீர்க்கப்படாமல் இருந்தன” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 2019ஆம் ஆண்டுக்குப் பின்னரும் சுமார் 70 முக்கிய வழக்குகள் முன்னேற்றமின்றி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகளில் ஏற்பட்டுவரும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தற்போது கடுமையான காலக்கெடுக்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒன்பது ஆண்டுகள் வரை நீடித்த ஆரம்பகட்ட விசாரணைகள் தற்போது ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய நிலுவை வழக்குகளைக் கையாள்வதால் புதிய முறைப்பாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை என உறுதியளித்த ரங்க திஸாநாயக்க, பழைய மற்றும் புதிய விசாரணைகளை ஒரே நேரத்தில் முன்னெடுக்கும் வகையில் வளங்கள் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.










