கஜகஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள மங்கிஸ்டாவ் பிராந்தியத்தில் காஸ்பியன் கடற்கரையில் இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியின்போது, திடீரென மோசமடைந்த வானிலை காரணமாக 19 இராணுவ வீரர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தகவலை கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
பயிற்சியின் போது வானிலை நிலைமை திடீரென மோசமடைந்ததுடன், காற்றின் வேகமும் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இராணுவ வீரர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களில் மூவர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய வீரர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கஜகஸ்தான் கடற்படை, அவசர நிலை அமைச்சின் மீட்புப் பிரிவுகள், விமானப் படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சம்பவத்துக்கான முழுமையான காரணங்களையும் சூழ்நிலைகளையும் கண்டறிவதற்காக, பாதுகாப்பு அமைச்சர் டௌரென் கொசானோவ் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்றும் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் இந்தக் குழு முன்னெடுக்கவுள்ளது.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளும் ஆதரவும் வழங்கப்படும் என கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் மீட்கப்பட்ட வீரர்களின் நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.










