இந்தியா மற்றும் இலங்கையில் காவலில் இருந்து தப்பியதுடன், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பின் கீழ் தேடப்பட்டு வந்த 54 வயதான இலங்கையர் ஒருவர் வாதுவை பகுதியில் வாடகை வீட்டில் மறைந்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குலானையைச் சேர்ந்த குறித்த நபர், கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு 337 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படையினரால் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்தியாவின் கொச்சியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து தப்பி கடல் மார்க்கமாக மீண்டும் இலங்கைக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு திரும்பிய பின்னர் வென்னப்புவ பகுதியில் கைது செய்யப்பட்ட அவர், மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து அவர் மீண்டும் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், செப்டெம்பர் 30ஆம் திகதி அதிகாலை வாதுவை பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










