துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த ஃப்ளைடுபாய் விமானத்தில் துணை விமானியால் தாக்கப்பட்டு காயமடைந்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “ஹீரோ” எனப் பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி, ஒக்டோபர் 1ஆம் திகதி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ” என தெரிவித்துள்ளார்.
மிக மோசமான ஆபத்தை எதிர்கொண்ட போதிலும், கடுமையான காயங்களுடன் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர் காட்டிய அளப்பரிய துணிச்சலையும் உறுதியையும் மோடி பாராட்டியுள்ளார்.
அவரது துணிச்சல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதுடன், பெரும் அனர்த்தம் ஏற்படுவதையும் தடுத்ததாக மோடி தெரிவித்துள்ளார்.
கேப்டன் மச்சாரை இந்தியா பெருமையுடன் நினைவுகூருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் செப்டெம்பர் 30ஆம் திகதி ஃப்ளைடுபாய் விமானம் FZ1073-இல் இடம்பெற்றது. துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி 174 பேருடன் பயணித்த விமானம், சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபுக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் துணை விமானி தம்மை கத்தியால் தாக்கியதாகவும், அதன் பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்காக போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை கீழே விழச் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கேப்டன் மச்சாரை “உண்மையான ஹீரோ” எனப் பாராட்டியுள்ளார்.
விமானம் திடீரென கீழ்நோக்கி இறங்கியபோது, பயணிகளும் விமானப் பணியாளர்களும் தலையிட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரை கட்டுப்படுத்தியுள்ளனர். சுமார் 30 விநாடிகளில் விமானம் 14,000 அடி உயரத்தை இழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மேலும் இரு விமானிகளின் உதவியுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
சம்பவத்தில் தொடர்புடைய இரு விமானிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கேப்டன் மச்சாருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விமானி அறையில் மோதல் ஏற்பட்டதை ஃப்ளைடுபாய் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் நிறைவடையும் வரை ஊகங்களைத் தவிர்க்குமாறு கோரியுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கான மற்றும் இஸ்ரேலிலிருந்து இயக்கப்படும் விமான சேவைகளை நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
விமானம் அவசரமாக இறங்கியபோது அது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பியிருந்தது. சந்தேகநபர் ஓமான் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், அவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்தார்.
மாற்று விமானம் மூலம் பயணிகள் பின்னர் இஸ்ரேலை சென்றடைந்தனர். மூன்று பயணிகளுக்கு சிறிய காயங்களுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டுக்குள் நுழையும் அனைத்து விமானிகளினதும் அடையாளங்களை சரிபார்க்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சம்பவத்திற்கான துணை விமானியின் நோக்கம் மற்றும் விமானி அறையில் இடம்பெற்ற சம்பவங்களின் முழுமையான வரிசை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









