இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கும் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா வரைவு அறிக்கை ஒன்றை தயாரித்திருந்ததாக ராய்ட்டர்ஸ்(Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ஆம் திகதி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ஆவணம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் பெயரில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அது வெளியிடப்படவில்லை.
ராய்ட்டர்ஸ்(Reuters) பார்வையிட்ட அந்த வரைவில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கு எதிரான “விரோத நடவடிக்கைகள்” என வர்ணிக்கப்படுவதுடன், அவை யூத எதிர்ப்புவாதத்திற்கு பங்களிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியின் செல்வாக்கு மிக்க உதவியாளரான டேவிட் மில்ஸ்டீனின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டதாக இரு தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் இந்த அறிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை என மூன்று தரப்பினர் ராய்ட்டர்ஸ்(Reuters)-க்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. செப்டம்பர் 8ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் பேசிய ரூபியோவும், பிரித்தானியாவின் நடவடிக்கையை நேரடியாகக் கண்டிக்காமல், அதுகுறித்து மேலதிக கருத்து தெரிவிக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம், இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துக்குள் காணப்படும் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதாக ராய்ட்டர்ஸ்(Reuters) குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாக மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம் குறித்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கை தொடர்பாக அமெரிக்க நிர்வாகம் கடுமையான அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதனிடையே, மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பான சர்வதேச விவாதமும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. 1967ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையில் உள்ள குடியேற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையும் பெரும்பாலான நாடுகளும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை எனக் கருதுகின்றன. அதேவேளை, இஸ்ரேல் இதனை மறுத்து, அந்தப் பகுதி சர்ச்சைக்குரிய பிரதேசம் எனக் கூறி வருகிறது.










