மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிறுவனத்தின் அடுத்த கட்ட முயற்சியாக ‘Muse Charm’ எனப்படும் சிறிய கையடக்க சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். சுமார் கைக்கடிகார அளவிலான இந்த சாதனம், மெட்டாவின் புதிய ‘Muse’ AI உதவியாளரை நேரடியாக அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 அங்குல திரையைக் கொண்ட ‘Charm’ சாதனத்தில் 5G இணைப்பு வசதியும் இடம்பெற்றுள்ளது. Wi-Fi இணைப்பு இல்லாவிட்டாலும் ‘Muse’ AI-ஐ பயன்படுத்த முடியும் என்றாலும், இந்த சாதனத்தின் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. பயனர்கள் சாதனத்தைத் தொட்டு ‘Muse’ AI-ஐ நேரடியாக அணுக முடியும் என்பதால், ஸ்மார்ட்போனில் உள்ள தனித்தனி AI செயலிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறையும் என மெட்டா எதிர்பார்க்கிறது.
முன்னதாக ‘Metaverse’ தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறை கணினி தளமாக சக்கர்பெர்க் முன்னிறுத்தியிருந்தார். தற்போது அதைவிட ‘தனிப்பட்ட சூப்பர் நுண்ணறிவு’ (Personal Superintelligence) முக்கியமானதாகவும் உடனடியாக உருவாகக்கூடிய தொழில்நுட்பமாகவும் அவர் கருதுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக மனிதர்கள் AI-ஐ பயன்படுத்தும் விதத்தை மாற்றக்கூடிய சாதனங்களை உருவாக்குவதில் மெட்டா கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘Muse Charm’ இளம் தலைமுறையினரிடம், குறிப்பாக Gen Z பயனர்களிடம் வரவேற்பைப் பெறக்கூடும் என சில தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர். AI உதவியாளர்களை வெறும் தேடல் கருவியாக அல்லாமல், தனிப்பட்ட துணை அல்லது ஆலோசனை வழங்கும் கருவியாகப் பயன்படுத்தும் போக்கு இளையோரிடையே அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், AI அடிப்படையிலான கையடக்க சாதனங்களுக்கு சந்தையில் வெற்றி பெறுவது சவாலாகவே உள்ளது. இதற்கு முன்னர் அறிமுகமான சில AI சாதனங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. எனவே, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு அப்பால் ‘Charm’ சாதனம் தனித்துவமான பயன்பாட்டை வழங்குமா என்பது வரும் மாதங்களில் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.










