“AI Amplified” என்ற தொனிப்பொருளில் கொழும்பு மொனார்ஜ் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் இன்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஏ.ஐ (AI) கண்காட்சி 2026 இன் இரண்டாம் நாள் நிகழ்வின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.
செப்டெம்பர் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் கண்காட்சி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் – மொபிட்டல் (SLT-MOBITEL) நிறுவனத்தினால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் இடம்பெற்று வரும் புதிய முன்னேற்றங்களை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
16 நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், அரசாங்கம், தொழில்துறை, புதிய தொழில்முனைவுகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
தேசிய ஏ.ஐ கண்காட்சி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்துதல், கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடுதல் மற்றும் இலங்கை முழுவதும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான தளமாக அமைந்தது.
கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில்துறை மற்றும் கல்வித்துறை கண்காட்சி கூடங்களையும் பார்வையிட்டார்.
இரண்டு நாள் நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து தேசிய ஏ.ஐ கண்காட்சி 2026 இன்று நிறைவடைந்தது.










