கொழும்பு 10-மலிகாவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை மோதலில், இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 16 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் மலிகாவத்தையில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கத்திக்குத்து தாக்குதலாக மாறியதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரம் தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த சம்பவத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் படுகாயமடைந்த மூவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மலிகாவத்தை பகுதியைச் சேர்ந்த, மொஹமட் அப்துல்லா (வயது 21) மற்றும் மொஹமட் ரெய்ஹான் (வயது 21) ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த 16 வயது சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக மலிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










