பிரித்தானிய இராணுவம், நாட்டின் முக்கியமான இராணுவ நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காக வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை இடையூறு செய்யும் அல்லது முடக்கும் தரைமட்ட மின்னணுப் போர் அமைப்பை கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய விமானப்படையான RAF(பிரிட்டிஷ் அரச விமானப்படை) பயன்படுத்தி வரும் இந்த அமைப்பு, எதிரிகளின் செயற்கைக்கோள்கள் மூலம் பிரித்தானியாவின் அணு ஆயுதங்களை ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் சிறப்புப் படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விண்வெளித் துறையில் பிரித்தானியா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக RAF தலைவர் எயார் சீஃப் மார்ஷல் Sir Harv Smyth எச்சரித்துள்ள நிலையில், புதிய விண்வெளி நடவடிக்கைப் படைப்பிரிவு(Space Effects Squadron) எனப்படும் பிரிவையும் பிரித்தானிய விமானப்படை உருவாக்கியுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, இந்தப் பிரிவு விண்வெளியில் ஏற்படும் விரோத நடவடிக்கைகளை இடையூறு செய்தல், அவற்றின் செயல்திறனைக் குறைத்தல் மற்றும் தேவையானபோது அவற்றைத் தடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும். ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே எச்சரித்தல், இராணுவத் தொடர்பாடல்கள் மற்றும் கப்பல்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிரித்தானிய செயற்கைக்கோள்களையும் இந்தப் பிரிவு பாதுகாக்கும்.
செயற்கைக்கோள்களைச் சார்ந்திருப்பது அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் Wes Streeting(வெஸ் ஸ்ட்ரீட்டிங்) தெரிவித்துள்ளார். செயற்கைக்கோள் சேவைகள் பாதிக்கப்பட்டால் உலகளாவிய நிலையறியும் அமைப்பு(GPS), வானிலை முன்னறிவிப்பு, எரிசக்தி விநியோகம், நிதிப் பரிவர்த்தனைகள், கையடக்கத் தொலைபேசி தொடர்புகள் மற்றும் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக GPS சேவை முற்றாக இழக்கப்பட்டால், பிரித்தானிய பொருளாதாரத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் செயற்கைக்கோள்களை இலக்காகக் கொண்ட மின்னணு போர் திறன்களை பயன்படுத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானிய விண்வெளி கட்டளைப் பிரிவு(Space Command)-ன் அப்போதைய தலைவர், ரஷ்யா தரைமட்ட அமைப்புகள் மூலம் பிரித்தானிய செயற்கைக்கோள்களின் சமிக்ஞைகளில் வாரந்தோறும் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறியிருந்தார். கடந்த மே மாதம், ரஷ்யாவைச் சேர்ந்த ஐந்து செயற்கைக்கோள்கள் இரண்டு பின்லாந்து வர்த்தக செயற்கைக்கோள்களுக்கு அருகில் ஆபத்தான முறையில் நகர்ந்ததை RAF கண்காணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் கனடா பகுதிகளில் GPS சமிக்ஞைகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கும் ரஷ்ய செயற்கைக்கோள் அமைப்பொன்று காரணமாக இருந்ததாக பிரித்தானிய விமானப்படைத் தலைவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவும் தனது செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பதற்காக விண்வெளியில் ஒரு குறிப்பிடப்படாத “ஆயுதத்தை” பயன்படுத்தியுள்ளதாக கடந்த வாரம் முதல் முறையாக உறுதிப்படுத்தியிருந்தது. இதற்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவித்து, விண்வெளியில் ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளன. அதேவேளை, மின்னணு சமிக்ஞைத் தடுப்பான்கள், செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யும் லேசர் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளியில் இருந்து பயன்படுத்தக்கூடிய பிற ஆயுதத் திறன்களை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால், விண்வெளி தற்போது நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புப் போட்டியின் புதிய முக்கிய தளமாக மாறி வருவதாக சர்வதேச அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.










