அமெரிக்காவில் குடியுரிமையற்றவர்கள் வாக்களித்துள்ளனரா என்பதைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குறைந்தது 47 மாநிலங்களின் வாக்காளர் பட்டியல்களை விரைவாக ஆய்வு செய்யுமாறு வெள்ளை மாளிகை மத்திய அரசின் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாத இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மின்னஞ்சல் ஒன்றின்படி, குடியுரிமையற்றவர்கள் வாக்களிப்பது தொடர்பான விசாரணைக்காக உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) நூற்றுக்கணக்கான அதிகாரிகளை நாடு முழுவதும் ஈடுபடுத்தியுள்ளது. மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வாக்காளர் பட்டியல்களில் மறைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை நிரப்புவதற்காக, தனியார் தரவு சேவையான Accurint மூலம் பெறப்பட்ட தகவல்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவல்கள் குடிவரவு மற்றும் குடியுரிமை தொடர்பான பல்வேறு அரசாங்க தரவுத்தளங்களுடன் ஒப்பிடப்படுகின்றன.
எனினும், இந்த ஆய்வு நடவடிக்கையில் தவறான அடையாளங்கள் கண்டறியப்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகளும் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். ஒரே பெயரைக் கொண்ட அமெரிக்கக் குடிமக்கள் குடியுரிமையற்றவர்களாக தவறாக அடையாளப்படுத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கக் குடிமக்களும் சில சந்தர்ப்பங்களில் தவறாக இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவ்வாறு தவறாக அடையாளப்படுத்தப்படுவது, குடிமக்களுக்கு மேலதிக விசாரணைகள் மற்றும் குடிவரவு தொடர்பான நடைமுறைகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவில் குடியுரிமையற்றவர்கள் வாக்களிப்பது பரவலாக இடம்பெறுகிறது என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்டகாலக் கூற்றுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என Reuters மேற்கொண்ட முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதேவேளை, 2000ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களில் மென்பொருள் கோளாறுகள் மற்றும் நிர்வாகத் தவறுகள் காரணமாக 30,000க்கும் அதிகமான குடியுரிமையற்றவர்கள் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என Reuters மேற்கொண்ட மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஆனால், இவர்களில் எத்தனை பேர் உண்மையில் வாக்களித்தனர் என்பது தெளிவாகவில்லை.
வெள்ளை மாளிகை, குடியுரிமையற்றவர்களின் வாக்காளர் பதிவுகள் அமெரிக்க தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளுக்கான ஆதாரம் எனக் கூறி வருகிறது. மறுபுறம், விமர்சகர்கள் இந்த நடவடிக்கை சட்டபூர்வமான வாக்காளர்களும் தவறாக சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்டு வாக்குரிமையை இழக்கும் நிலையை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர். இதனிடையே, DHS அதிகாரிகள் சுமார் 1,620 வழக்குகள் தற்போது விசாரணையில் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியல்களை ஆய்வு செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.










