பாத்திமா எஸ்ஸஹ்ரா எல் மன்சூரியை நாட்டின் முதல் பெண் பிரதமராக மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது நியமித்துள்ளார்.
இதன் மூலம் அரபு உலகில் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
50 வயதான எல் மன்சூரி, நகரத் திட்டமிடல் அமைச்சராகவும் மராகெஷ் நகர மேயராகவும் பதவி வகித்து வந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச மாளிகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனது நியமனம் “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என தொலைக்காட்சி உரையொன்றில் தெரிவித்த எல் மன்சூரி, நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும், இது தனக்கு மட்டுமன்றி அனைத்து மொராக்கோ பெண்களுக்கும் பெருமைக்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான Authenticity and Modernity Party (PAM) அதிக வாக்குகளைப் பெற்று, 395 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 97 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
எனினும், தனித்து ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 198 ஆசனங்களை விட இது குறைவாகும். எனவே, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது எல் மன்சூரியின் முதல் முக்கிய பணியாக அமையவுள்ளது.
அரபு உலகில் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் எல் மன்சூரி ஆவார். இதற்கு முன்னர் துனிசியாவின் நஜ்லா பூடன் 2021 ஒக்டோபர் முதல் 2023 ஆகஸ்ட் வரை பிரதமராக பதவி வகித்திருந்தார்.
1976ஆம் ஆண்டு மராகெஷில் பிறந்த எல் மன்சூரி, சட்டம் பயின்றதுடன் பிரான்ஸின் மொன்பெலியே பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி டிப்ளோமாவையும், அமெரிக்காவின் நியூயோர்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலோ-சாக்சன் வணிகச் சட்டம் தொடர்பான டிப்ளோமாவையும் பெற்றுள்ளார்.
2009ஆம் ஆண்டு மராகெஷ் நகர மேயராகத் தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் அவர் உள்ளூராட்சி நிர்வாகத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இதன்மூலம் மராகெஷ் நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றார்.
முதல் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், 2021ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் மராகெஷ் மாநகர சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதேவேளை, தொடர்ச்சியான பல தேர்தல்களில் பிரதிநிதிகள் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற அனுபவத்தையும் பெற்றார்.
2021 ஒக்டோபரில் தேசிய அரசாங்கத்தில் இணைந்த எல் மன்சூரி, தேசிய இடவமைப்புத் திட்டமிடல், நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நகர்ப்புற கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நேரடி வீடமைப்பு உதவித் திட்டம், நகரத் திட்டமிடல் மற்றும் இடவமைப்பு அபிவிருத்தி சீர்திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களிலும், அல் ஹவுஸ் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளிலும் அவரது அமைச்சு முக்கிய பங்காற்றியிருந்தது.










