இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை முதல் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாலை அல்லது இரவு வேளைகளில் முல்லைத்தீவு முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் பொதுவாக ஓரளவு அமைதியாகக் காணப்படும். எனினும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










