அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரங்களில் செலவிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கூட்டாட்சி வரம்புகளை ஜூன் மாதம் நீக்கியதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலில் காங்கிரஸின் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள குடியரசுக் கட்சி முயற்சித்து வரும் நிலையில் இந்த செலவின அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் ஆணையத்தின் (FEC) தகவல்களின்படி, குடியரசுக் கட்சியின் தேசிய மற்றும் பிரசாரக் குழுக்கள் முன்னர் நடைமுறையில் இருந்த செலவின வரம்பை விட 48 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக செலவிட்டுள்ளன. இதே காலப்பகுதியில் ஜனநாயகக் கட்சியின் குழுக்களும் முந்தைய வரம்புகளை மீறியிருந்தாலும், அந்தத் தொகை 4 மில்லியன் டொலருக்கும் குறைவாக இருந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, குடியரசுக் கட்சியின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தேர்தல் குழுக்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக ஒருங்கிணைந்த செலவினங்களை பெருமளவில் அதிகரித்துள்ளன. தேசிய குடியரசுக் கட்சி செனட் குழு (NRSC) மற்றும் தேசிய குடியரசுக் கட்சி காங்கிரஸ் குழு (NRCC) ஆகியவை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை போட்டிகளில் மொத்தமாக சுமார் 56 மில்லியன் டொலர் ஒருங்கிணைந்த செலவினங்களை மேற்கொண்டுள்ளன. அதேவேளை, அவற்றின் ஜனநாயகக் கட்சி இணை குழுக்கள் சுமார் 6 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளன.
ஜூன் 30ஆம் திகதி 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் தேர்தல் செலவினங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரம்புகள் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துச் சுதந்திர உரிமையை மீறுவதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் முன்னர் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒருங்கிணைந்த பிரசாரச் செலவினங்களுக்கு கட்சிகளுக்கு அதிகளவிலான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, குடியரசுக் கட்சியின் மூன்று முக்கிய தேசியக் குழுக்களிடம் ஆகஸ்ட் இறுதியில் சுமார் 233 மில்லியன் டொலர் பண இருப்பு இருந்ததாகவும், ஜனநாயகக் கட்சியின் இணையான குழுக்களிடம் சுமார் 130 மில்லியன் டொலர் இருந்ததாகவும் தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தல் நெருங்கும் நிலையில், இரு கட்சிகளின் தேர்தல் பிரசாரச் செலவுகளும் மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.










