தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளை செவ்வாய்க்கிழமை உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.










