அமெரிக்க தபால் சேவைக்கு 126 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், 5 மில்லியனுக்கும் அதிகமான போலி தபால் கட்டண லேபிள்களை விற்பனை செய்த மோசடி தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபஹீம் அக்ரம் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அமெரிக்க தபால் சேவையின் (USPS) போலி தபால் கட்டண லேபிள்களை இணையத்தளம் ஒன்றின் ஊடாக சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாவட்டத்திற்கான சட்டமா அதிபர் ஜேசன் ரெடிங் குயினோன்ஸ் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் திட்டத்தின் மூலம் 5.1 மில்லியனுக்கும் அதிகமான போலி தபால் லேபிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அமெரிக்க தபால் சேவைக்கு 126 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதிகளின் எடை, அளவு அல்லது சென்றடையும் இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு போலி தபால் லேபிளும் சுமார் 2 அமெரிக்க டொலர் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அமெரிக்க தபால் சேவைக்கு செலுத்த வேண்டிய உண்மையான தபால் கட்டணத்தைத் தவிர்த்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“இந்த மோசடி எளிமையானதாக இருந்தாலும் மிகப் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது” என குயினோன்ஸ் தெரிவித்துள்ளார். 5.1 மில்லியனுக்கும் அதிகமான போலி லேபிள்கள் மற்றும் 126 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு தொடர்பில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இணையத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளதுடன், அதன் இணையதளப் பெயரும் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க தபால் ஆய்வு சேவை மற்றும் தெற்கு புளோரிடா மாவட்டத்திற்கான சட்டமா அதிபர் அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த கைப்பற்றல் உத்தரவின் அடிப்படையில் குறித்த இணையதளப் பெயர் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அக்ரமுக்கு எதிராக கூட்டாட்சி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்ரமை கைது செய்து, குற்றவாளி என நிரூபிக்க வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வரையான வெகுமதியை அமெரிக்க தபால் ஆய்வு சேவை அறிவித்துள்ளது.
அக்ரம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 1-877-876-2455 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அமெரிக்க தபால் ஆய்வாளர்களைத் தொடர்புகொண்டு “Law Enforcement” எனத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதேவேளை, அக்ரமை பொதுமக்கள் தாங்களாகவே பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.










