ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஆய்வகப் பணியாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் நுரையீரல் பிளேக் (Pneumonic Plague) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரஷ்ய ஊடகங்களின்படி, உயிரிழந்த பெண் டார்யா ஷிபிலோவா (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சைபீரியா மற்றும் தூர கிழக்கு பிராந்தியங்களுக்கான இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அல் ஜசீரா மேற்கோளிட்டுள்ள தகவல்களின்படி, ஷிபிலோவா கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி பணியிடத்தில் இருந்தபோது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஷெலெகோவ் நகரிலுள்ள வைத்தியசாலையில் அவர் உயிரிழந்தார்.
ஆய்வகத்தில் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட சோதனைக் குழாய் (test tube) தொடர்பான விபத்தைத் தொடர்ந்து அவர் நோய்க்கிருமிக்கு ஆளாகியிருக்கலாம் என சில ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
ஷிபிலோவாவுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் உயிரிழந்த வைத்தியசாலையின் சில பகுதிகளும் மூடப்பட்டுள்ளன. அருகிலுள்ள அலுமினிய தொழிற்சாலையும் தனது ஊழியர்கள் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், ஷிபிலோவா பணியாற்றிய நோய்க்கிருமிகளால் அவரது உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் பரிசோதனைகளில் கண்டறியப்படவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இர்குட்ஸ்க் ஆளுநர் இகோர் கோப்சேவ், ஷிபிலோவா “தெரியாத காரணத்தினால் ஏற்பட்ட நிமோனியா” காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அண்மைய நாட்களில் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவன ஊழியர்களிடையே புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பான ரொஸ்போட்ரெப்நாட்ஸோர் (Rospotrebnadzor), உயிரிழந்த ஆய்வாளருடன் தொடர்பில் இருந்தவர்களில் இருவருக்கு கொவிட்-19 தொற்றும், மேலும் இருவருக்கு ரைனோ வைரஸ் தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வேறு எந்த தொற்று நோய்களும் கண்டறியப்படவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், நுரையீரல் பிளேக் மிகவும் தீவிரமான பிளேக் நோயின் ஒரு வடிவமாகும் என்பதால் இந்தச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. நெருங்கிய தொடர்பின்போது தொற்றுள்ள சுவாசத் துளிகள் மூலம் இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும்.
பிளேக் நோய் “Yersinia pestis” எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. சைபீரியா உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில் இந்நோய் இன்னமும் காணப்படுகிறது. புபோனிக் பிளேக் (Bubonic plague) மிகவும் பொதுவான வடிவமாகும். நுரையீரல் பிளேக் மற்றும் செப்டிசீமிக் பிளேக் (Septicaemic plague) ஆகியவை குறைவாகவே காணப்பட்டாலும், துரிதமாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
பிளேக்கின் அனைத்து வடிவங்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்க முடியும்.
இந்த நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், ஊகங்களுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறு ரஷ்ய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆபத்தான நோய்க்கிருமிக்கு ஒருவர் வெளிப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், தனிமைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் தடுப்பு நோக்கிலான நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், ஷிபிலோவா பிளேக் நோயால் உயிரிழந்தார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.










