இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின்போது, SLS தரச்சான்று முத்திரை இல்லாத 327 மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பறிமுதல் செய்துள்ளது.
21 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது 84 சுற்றிவளைப்புகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் கீழ், SLS 517 தரநிலைக்கு அமைவாகத் தேவையான SLS தரச்சான்று முத்திரையின்றி விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனைகளின்போது பல்வேறு வர்த்தகப் பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட தலைக்கவசங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான அல்லது ஒத்த வர்த்தகப் பெயர்களைக் கொண்ட தலைக்கவசங்கள் பல மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அப்பால் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ள அதிகாரசபை, இத்தகைய தலைக்கவசங்களைச் சந்தைக்குக் கொண்டுவந்த விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மேலும், கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் SLS முத்திரை ஒட்டிகள் பயன்படுத்தப்படுவது தொடர்பாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேவையான SLS தரச்சான்று முத்திரையற்ற சிறுவர்களுக்கான தலைக்கவசங்கள் மற்றும் சிறிய அளவிலான தலைக்கவசங்களும் கண்டறியப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அல்லது ஏனைய வாகனப் பயனாளர்களுக்கான பாதுகாப்புத் தலைக்கவசங்களாக இவை விற்பனை செய்யப்படும்போது, SLS 517 தரநிலையின் கீழ் அவற்றைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
முறையான கொள்வனவு பற்றுச்சீட்டுகள் இன்றி தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன. சில பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் கண்டறிவதற்குப் போதுமான தகவல்கள் இல்லாத நிலையும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய நடவடிக்கையின்போது, 98 சுற்றிவளைப்புகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதுடன், SLS தரச்சான்று முத்திரையற்ற 431க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி, 2026ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு விசேட நடவடிக்கைகளிலும் மொத்தமாக 182 சுற்றிவளைப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 758க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கைகள், குறித்த இரண்டு நடவடிக்கைகளின்போதும் விற்பனை நிலையங்களிலிருந்து அதிகாரசபையால் கைப்பற்றப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே குறிக்கின்றன எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தேவையான SLS தரச்சான்று முத்திரையின்றி மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இணையவழி விற்பனையாளர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியில் சோதனைகளும் திடீர் சுற்றிவளைப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும்போது SLS தரச்சான்று முத்திரையின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதுடன், முறையான கொள்வனவு பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேவையான தரச்சான்று முத்திரையின்றித் தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தல் தொடர்பான தகவல்கள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










