கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களை இலக்கு வைத்து கப்பம் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் துறைமுக நகரில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களிடம் கப்பம் கோரப்பட்டதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து ஆறு கடவுச்சீட்டுகள், 42 சிம் அட்டைகள் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த கப்பம் கோரும் நடவடிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரிடம் இன்று கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










