அரச வங்கியொன்றில் 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட, 31 வயதுடைய முன்னாள் பிரதம காசாளருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) 2025 மே மாதம் ஆரம்பித்த விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை, ஹோமாகம மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த அரச வங்கியின் பிரதம காசாளராகப் பணியாற்றிய காலத்தில், வங்கியிலிருந்து 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தைப் பரிமாற்றம் செய்தமை, அதில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வங்கியின் தெஹிவளை கிளையிலுள்ள தனது தனிப்பட்ட கணக்கில் வரவு வைத்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
கணினி மென்பொருளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் மாற்றங்களைச் செய்து, மோசடியான பணப் பரிவர்த்தனைகளை உருவாக்கிய குற்றச்சாட்டும் இதில் உள்ளடங்கியிருந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி, குறிப்பிட்ட வரம்பை மீறிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு பிரதம காசாளர்கள் இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரின் அனுமதியைப் பெறுவது அவசியம் எனத் தெரிவித்தார்.
எனினும், குறித்த நபர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கு வழங்கப்பட்ட நம்பிக்கையை மீறி மோசடியில் ஈடுபட்டதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.
சம்பவத்தன்று மாலை வங்கியின் முகாமையாளர் கணக்குகளைச் சரிபார்த்தபோது, 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தனிப்பட்ட கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே குறித்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டவர் இணையவழி முதலீட்டு மோசடியொன்றில் சிக்கியிருந்ததாகக் குறிப்பிட்டு, அவருக்கு குறைந்த தண்டனை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஊடகங்கள் ஊடாக அதிக இலாபம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்ட இணையவழி முதலீட்டுத் திட்டமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு கிடைத்ததாகவும், ஆரம்பத்தில் சிறிய தொகைகளை முதலீடு செய்து அதற்கான இலாபத்தைப் பெற்றதாகவும் பிரதிவாதி தரப்பு தெரிவித்தது.
பின்னர், முதலீடு செய்த பணத்தை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டதாகவும், பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியபோது, திட்டத்தை முன்னெடுத்தவர்கள் மேலதிகமாகப் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்துமாறு கோரியதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தனது முதலீட்டுப் பணத்தை மீட்டெடுக்கும் நோக்கில் வங்கிப் பணத்தை மோசடி செய்ததாகவும், தண்டனைத் தீர்மானிக்கும்போது இந்தச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொள்ளுமாறும் அவர்கள் கோரினர்.
இரு தரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், முதல் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு ஐந்து ஆண்டுகள் இலகு வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையும் விதித்தது.
எனினும், அனைத்து தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் அனுபவிக்க வேண்டிய மொத்த சிறைத்தண்டனைக் காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்கனவே விளக்கமறியலில் கழித்த காலமும் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், மோசடி செய்யப்பட்ட 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வங்கிக்குச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக நான்கு ஆண்டுகள் இலகு வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.










