களுத்துறை தெற்குப் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் நபருடனான முரண்பாடு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
களாசா பகுதியில் அமைந்துள்ள தனது உணவகத்திற்கு வெளியே, நேற்று வெள்ளிக்கிழமை சம்பத் (வயது 54) என்ற உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தொடங்கொட பகுதியைச் சேர்ந்த அவரின் மனைவி, துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், ரி-56 ரகத் தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கியின் ரவைகள் தீரும் வரை சந்தேகநபர் தொடர்ந்து சுட்டதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
கொல்லப்பட்ட நபர், பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாகவும், அமிலத் தாக்குதலொன்றின் காரணமாக அவரது பார்வைத்திறன் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் நபருடன் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கைகளில் உயிரிழந்தவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல்களும் விசாரணையாளர்களுக்குக் கிடைத்துள்ளன.
உயிரிழந்தவருக்கும் குறித்த சந்தேகநபருக்கும் இடையில் முன்னர் நெருங்கிய தொடர்பு காணப்பட்டதாகவும், பின்னர் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சூதாட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உயிரிழந்தவரின் உணவகத்தில் ஓர் அறையை வழங்குமாறு குறித்த சந்தேகநபர் கோரியதைத் தொடர்ந்து இந்த முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கொலைக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டறிவதற்கும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










