போலி சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வெறுப்புப் பேச்சுகளைப் பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பல்வேறு சமூகங்களை இலக்காகக் கொண்டு வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவுகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிலர் போலி சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைப் பரப்பி வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இலக்கு வைத்து வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்படுவதற்கான ஆதாரங்கள் இதுவரை விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சில சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏற்கனவே நீதிமன்றங்களிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.










