சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக ரியாத் நகரில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு பயணிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, சவூதி அரேபிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தேவையான சந்தர்ப்பங்களில் வீடுகளுக்குள் இருக்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் தூதரகம் இலங்கையர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலைமை தொடர்பான காணொளிகள், தகவல் செய்திகள், செய்தி அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைப் பரப்புவதையோ பகிர்வதையோ தவிர்க்குமாறும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில், உத்தியோகபூர்வமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல் மூலங்களிலிருந்து வெளியாகும் செய்திகளை மட்டுமே நம்புமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகமும் ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகமும் வழமைபோன்று இயங்கி வருவதுடன், தூதரகச் சேவைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில், இராஜதந்திரப் பணிமனைகள் தமது உத்தியோகபூர்வத் தொடர்பாடல் வழிகள் ஊடாக மேலதிக அறிவிப்புகளையும் பாதுகாப்பு ஆலோசனைகளையும் வெளியிடும் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தூதரக உதவிகள் தேவைப்படும் இலங்கையர்கள் பின்வரும் தொடர்பு வழிகள் ஊடாகத் தூதரகத்தை அணுக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத் தொலைபேசி இலக்கம்: +966 11 518 9330
அவசர தொலைபேசி இலக்கம்: 054 947 7567
மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk
இணையத்தளம்: www.emb-riyadh.gov.lk/en
இலங்கையர்கள் அமைதியாகச் செயற்படுமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து, உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்குமாறும் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.











