டொயோட்டா மோட்டார் கூட்டுத்தாபனத்தின் புதிய லேண்ட் க்ரூஸர் FJ ரக வாகனம், ஜப்பானில் எதிர்பார்ப்புகளைத் தாண்டிய விற்பனையைப் பதிவு செய்துள்ளதுடன், தென்கிழக்காசிய நாடுகளிலும் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றது. சீன வாகன உற்பத்தியாளர்களின் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஆசிய சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள டொயோட்டா இந்தப் புதிய ரக வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 மே மாதத்தின் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஜப்பானில் சுமார் 12,000 லேண்ட் க்ரூஸர் FJ வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாதாந்தம் 1,300 வாகனங்களை விற்பனை செய்வதென நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், இந்த விற்பனை எண்ணிக்கை எதிர்பார்ப்புகளைப் பெருமளவில் விஞ்சியுள்ளது.
மேலும், இந்தக் கச்சிதமான ரக SUV வாகனம் தற்போது விற்பனை செய்யப்படும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் மொத்தமாக சுமார் 3,000 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
‘குட்டி லேண்ட் க்ரூஸர்’ எனப் பிரபலமாக அழைக்கப்படும் இந்த வாகனம், டொயோட்டாவின் புகழ்பெற்ற லேண்ட் க்ரூஸர் ரகத்தின் சிறிய வடிவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குறுகிய வீதிகளைக் கொண்ட ஆசிய நாடுகளின் சந்தையைக் கருத்திற்கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் சுமார் 4.5 மில்லியன் யென் (28,500 அமெரிக்க டொலர்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் இந்த ஐந்து இருக்கைகளைக் கொண்ட SUV வாகனத்தில், 2.7 லீற்றர் பெற்றோல் இயந்திரம், ஆறு வேக தானியங்கிக் கியர் பெட்டி மற்றும் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்கும் (4WD) கட்டமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த வாகனம் தாய்லாந்தில் தயாரிக்கப்படுவதுடன், அங்கு 2026 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மே மாதம் ஜப்பானில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.
போட்டித்தன்மை மிக்க விலைகளில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் சீன வாகன உற்பத்தியாளர்கள் ஆசிய சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில், தனது சந்தை நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் FJ வாகனத்தை முன்னிறுத்தி வருகின்றது.
அத்துடன், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்தக் கச்சிதமான லேண்ட் க்ரூஸர் வாகனத்துக்கு அதிக கேள்வி நிலவும் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
ஏற்கனவே சந்தையில் உள்ள லேண்ட் க்ரூஸர் 70, 250 மற்றும் 300 தொடர்களுடன் தற்போது FJ ரகமும் இணைந்துள்ளது. இதன் மூலம், பாரம்பரிய லேண்ட் க்ரூஸர் வாகனங்களின் உறுதித்தன்மை மற்றும் கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் திறன் ஆகியவற்றைப் பேணியவாறு, சிறிய அளவிலான மாற்றுத் தெரிவை வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா வழங்குகின்றது.
எவ்வாறாயினும், லேண்ட் க்ரூஸர் FJ வாகனத்தை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ திகதி அல்லது விலை தொடர்பான அறிவிப்பை டொயோட்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.










